skip to main content

      பேரொளி படைத்த அன்னையின் முகத்திலே தோன்றும் சிரிப்பினால் நம் துன்பங்களை என்றும் துடைத்து அகற்றுகிறாள் . பக்தர்கள் மாரியம்மனை மாரியாத்தா மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் மகாமாரியம்மன் மற்றும் அம்மா என பலவாறு அழைத்து வணங்கி மகிழ்கின்றனர் . சமயபுரம் அருள்மிகு மாரியம்மனை இப்பகுதியில் காணப்படும் பிற அம்மன் கோயில்களான அன்பில் நார்த்தாமலை புன்னை நல்லூர் மற்றும் வீரசிங்கம்பேட்டை ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாக தொடர்புபடுத்திக்கூறும் முறையும் மக்களிடம் உண்டு . எனினும் தமிழகத்தின் அம்மன் கோயில்களில் சிறப்புப்பெற்றதும் தலைமையுமாக விளங்கும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு என்பதை அறியலாம் .

      அம்மன் வீற்றிருக்கும் இத்திருத்தலத்திற்கு சிவன் பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோர்களால் வணங்கப்பெற்றதுமான பெருமையும் மகத்துவமும் உண்டு . ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதசுவாமியின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய வடிவங்கள் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால் இத்திருக்கோயில் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போலவே சுதையாலான சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களையும் தன்னுள் கைக்கொண்டு 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் அருள்மிகு மாரியம்மன் இத்தலத்தில் அருள்பாலித்து வருவது தனிப்பெரும் சிறப்பாகும் . அம்பாள் நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தன் திருமேனியில் கொண்டு ஆட்சி செய்து வருகிறாள் .

      பக்தர்களின் நவக்கிரகதோஷங்கள் நீங்க ஒரே வ்ழி அம்பாளை பூரண மனதுடன் தரிசிப்பதாகும் . அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , மூன்று உற்சவ திருமேனிகளைக் கொண்டதாகும் . ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முதன்மை திருமேனி இங்குள்ள ஸ்தல விருட்சத்திற்குள்ளிருந்து எடுக்கப்பட்டவையாகும் . சுயம்புவான இச்செப்புத் திருமேனி காலக்கணிப்பிற்கு எட்டாதவாறு உள்ளது . இப்பஞ்சலோகத்தில் பல்வேறு வடுக்கள் படிந்துள்ளன . இத்தகைய வடுக்களைக் கொண்ட அம்மனை பக்தர்கள் ஆயிரம் கண்ணுடையாள் என்று போற்றி வணங்குகின்றனர் . மேலும் இதற்கு புராண ரீதியாக பின்வரும் கருத்தினையும் முன்வைப்பர் .

      தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயிணியை சிவபெருமான் தூக்கி உத்திர தாண்டவம் ஆடியபோது அம்பாளின் திருக்கண்கள் இப்பகுதியில் விழுந்ததால் கண்ணனூர் என்ற பெயர் தொடர்ந்து இருந்து வருகிறது . தொன்மையான இந்த உற்சவ அம்பாளின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன . இது இத்தலத்தின் புராணப் பெருமையைக் கூறுவதாக உள்ளது . மூலவரைப் போல எட்டுக்கைகளுடன் திருவீற்றிருக்கும் அன்னை சுகாசனத்தில் மூலவர் சன்னதிக்கு முன்புறம் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறாள் . இந்த உற்சவ அம்பாளுக்கு பக்தர்கள் தங்ககவசம் சாற்றி வழிபடும் முறை திருக்கோயில் நிர்வாகத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

      ஆதியில் உள்ள முதன்மையான இச்செப்புத்திருமேனி பழுதுபட்டதாக எண்ணி பிற்கால் விஜயநகர நாயக்க மன்னன் சூரப்பநாயக்கர் மற்றொரு செப்புத் திருமேனியை அம்பாளின் அனுமதியுடன் இத்திருக்கோயிலுக்கு வழங்கினார் . ஆயிரம் கண்ணுடையாளின் உலோகத்திருமேனிக்கு மேற்புறம் கிழக்கு பார்த்த நிலையில் மூலவரைப் போல் காட்சிதரும் அம்மன் வருடத்தில் ஒருமுறை மட்டும் பிரம்மோற்சவ தேரில் வெள்ளிக்குதிரையில் உற்சவராக வலம் வருவதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் .

1990 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகம் மற்றொரு உற்சவரை 31.10.1990 ல் திருக்கோயிலுக்கு வழங்கியது . தற்கால கலை வேலைப்பாடுகள் கொண்டு மூலவரைப் போலவே காட்சியளிக்கும் இத்திருமேனி சுமார் 1 1/2 அடி உயரம் கொண்டதாகும் . தற்போது தங்கரதம் அபிஷேகம் மற்றும் திருக்கோயில் உற்சவங்கள் அனைத்திற்கும் இத்திருமேனியையே வழிபாடு செய்கின்றனர் .